![]() |
||
![]() |
||
பல நூறு வருட காலமாக இந்திய பிரஜைகள் இந்நாட்டிற்கு வருகை தந்ததோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்களோடு ஒன்றாக கலந்து இலங்கையர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்தியப் பிரஜைகளின் வருகையானது விஜயன் இலங்கைக்கு வருகைதந்த காலம் முதல் பிரித்தானியர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலப்பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. இந்நிலைமை அடிக்கடி இடம் பெற்றுள்ளதுடன், பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் என்ற வகையில் வருகை தந்த அதிகமான இந்தியர்கள் இந்நாட்டில் தங்கியமை மிகப் பாரதூரமான நிலைமையாகும். அத்துடன் இலங்கையின் வியாபாரத்தளம் அதிகம் இந்தியர்கள் கைவசமானதும், மற்றத் தொழில் தளங்களிலும் இந்தியர்கள் இணைந்து கொண்டதாலும் இந்நாட்டில் வேலையற்ற நிலைமை உக்கிரமடைந்தது. அதனால் இந்திய குடிவருகை தொடர்பில் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி இரு நாடுகளும் மற்றும் இரு நாட்டு அரசியல்வாதிகளும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இது பற்றி பேச்சுவார்த்தையை நடாத்தினார்கள். ஆனாலும் அப்போது இலங்கையும் இந்தியாவும் பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழாக இருந்தமையால், அதிக செயற்பாடுகள் பிரித்தானிய தோட்ட அதிகாரியின் எண்ணப்படியே இடம் பெற்றது. அத்தோடு இரு நாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டதனால் இரு நாட்டிற்கிடையிலான போக்குவரத்திற்கும் அது பாதகமாக அமையவில்லை.
|
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அந்நாட்டு குடிவரவு குடியகல்வுச் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாகவும், 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்நாட்டு குடிவரவு குடியகல்வுச் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாகவும் ஏற்பாடுகளை மேற்கொண்டதன் காரணமாக இந்திய பிரஜைகள் இரு நாடுகளுக்கு இடையிலும் பயணிப்பது சட்டரீதியாக்கப்பட்டது. அதற்கமைவாக அப்போது பிரதமர்களாக இருந்த ஶ்ரீ ஜவகர்லால் நேரு மற்றும் டி.எஸ். சேனாநாயக்க அவர்களுக்கு இடையில், இந்நாட்டில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளின் பிரஜாவுரிமைத் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்நாட்டு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்காக விசேட சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனபோதிலும் இத்திட்டமானது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட நேரு–கொத்தலாவல உடன்படிக்கைக்கு அமைவாகவும், 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு அமைவாகவும், அதன் அடிப்படையில் இந்தியப் பிரஜைகளில் ஒரு பகுதியினரை இலங்கையில் தங்குவதற்கும் ஏனையோரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஆன போதும் இவ்வுடன்படிக்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன்படி இந்நாட்டில் வசிக்கின்ற நபர்களை பதிவு செய்து அவர்களை உரிய முறையில் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக அடையாள அட்டையினை விநியோகிக்கும் செயல்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை திட்டமிடப்பட்டது. அதன் மூலம் இந்நாட்டிற்கு சட்ட விரோதமாக வருகைதரும் இந்திய வம்சாவளியினரை கட்டுப்படுத்த முடியும் என அப்போதைய அரசிற்கு காரணங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கமைய மலேசியாவில் அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறையைக் கருத்தில் கொண்டு இந்நாட்டிற்குப் பொருத்தமான முறையில் பிரஜைகளைப் பதிவு செய்து அடையாள அட்டை விநியோகிப்பதற்கான சட்டங்களை ஆக்குவதற்கு சட்டவரைஞருக்கு அனுப்பப்பட்டு, 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம், 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதுடன், அதற்கான ஒழுங்குவிதிகள் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதோடு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கமைவாக 1971.10.01 ஆம் திகதி ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் நிறுவப்பட்டது. ஆட்களைப் பதிவு செய்யும் சட்டமானது, 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சில வருடங்களானது. 1964 ஆம் ஆண்டின் சிறிமா –சாஸ்திரி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையாக ஒழுங்குவிதிகள் மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையே இத்தாமதத்திற்கு காரணமாகும். இதற்கு மேலதிகமாக சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிர்வாக செயல்முறையினை அமைப்பது மற்றும் அடையாள அட்டை தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு குறிப்பிட்ட ஒரு அவகாசம் தேவைப்பட்டமையும் மற்றுமொரு காரணமாகும். 1972.09.14 ஆம் திகதி முதலாவது அடையாள அட்டையானது திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் காணப்பட்ட தொழில் நுட்பத்திற்கு அமைவாக கடதாசியை அடிப்படையாகக் கொண்ட மனித முயற்சியைக் கொண்ட (Manual Paper Based System) நடைமுறையினூடாக விநியோகிக்கப்பட்ட அவ் அடையாள அட்டையானது அக்காலகட்டத்தில் மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டையாகக் கருதப்பட்டது. அதற்காக உபயோகிக்கப்பட்ட மென்தகடிடல் (Laminating) தொழில் நுட்பமானது இலங்கைக்கு புதியதொரு அனுபவமாகக் காணப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைப் புகைப்படமே அடையாள அட்டையில் ஒட்டப்பட்டது. உரிய நபரின் விபரம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன கையினால் எழுதப்பட்து. விசேடமாக தமிழ் மற்றும் முஸ்லிம் விண்ணப்பதார்களுக்கு மாத்திரம் அடையாள அட்டையின் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும், ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு சிங்கள மொழியிலும் பதிவு செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டு முதல் அடையாள அட்டை இலக்கமானது தட்டச்சு இயந்திரம் மூலம் அச்சிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல் அடையாள அட்டையில் வர்ணப் புகைப்படம் ஒட்டுவது ஆரம்பிக்கப்பட்டது. மனித முயற்சியைக் கொண்ட தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையானது 2014 ஆம் ஆண்டில் பாரிய மாற்றத்திற்கு உட்பட்டது. 2014.02.28 ஆம் திகதி முதல் கணனி மூலம் அச்சிடப்பட்ட இரண்டு பிரதான மொழிகளும் உள்ளடங்கிய அடையாள அட்டை வநியோகிக்கப்பட்டது. எவ்வாறாயினும் 1970 களில் உற்பத்தி செய்யப்பட்ட மென்தகடிடும் இயந்திரத்தின் மூலமே இவ் அடையாள அட்டைகளும் மென்தகடிடப்படுகிறது (Laminating). அடையாள அட்டை அச்சிடுவதற்கு உபயோகிக்கப்படும் அட்டையானது 1970 களில் பாவிக்கப்பட்ட விவரக் குறிப்புகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. நிகழ்காலத் தொழில் நுட்பத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட மென்பொருளை உபயோகித்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு (Transliteration) மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க அடையாள அட்டையினைப் பொது மக்களுக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
திணைக்களத்தின் விடயப் பரப்பு கருப்பொருள் அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
நோக்கு அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளம்
பணிக்கூற்று உள் நாட்டில் சகல இலங்கைப் பிரஜைகளின் மனித, சமூக, பொருளதார, அரசியல் மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நாட்டைவிட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும், அவர்களின் தகவல்களை உள்ளடக்கி தேசிய பிரஜைகள் தரவுத் தளத்தை அமைத்தல். யாராவது ஒரு பிரஜையின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அரச மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்குதல்.
குறிக்கோள்கள் அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் தரவுகளை இலத்திரனியல் தேசிய தரவு மையத்தில், தேசிய தனிநபர் பெயர் பட்டியலாகத் தயாரித்து, உரித்துடைய பிரஜைகளை அடையாளப்படுத்தி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதுடன், சட்டபூர்வ தரவுப் பரிமாற்றத் தளத்தினூடாக ஏனைய நிறுவனங்களோடு தரவுகளைப் பரிமாற்றம் செய்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குதல்.
பொறுப்புக்கள்
பிரதான செயற்பாடுகள்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அமைவான சட்டப் பின்னணி திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சட்டப் பின்னணியானது, 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம் மற்றும் அதன் கீழ் விதிக்கப்பட்ட கட்டளைகள், விதிமுறைகள், அறிவித்தல்கள் மூலம் ஆகும். இச் சட்டம் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (மேலதிக விபரம்)
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடையாள அட்டையை தயாரிப்பதற்காக உபயோகிக்கப்படும் உபகரணங்கள் காலம் கடந்த நிலையில் காணப்படுவதால் அதற்கான மேலதிக பாகங்களை சந்தையில் கொள்முதல் செய்ய முடியாத காரணத்தினாலும், அடையாள அட்டை தயாரிப்பதற்காக தற்பொழுது காணப்படும் நடைமுறையினை தொடர்ந்தும் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. அதுபோன்றே அவ் உபகரணங்கள் ஆட்திறனைக் கொண்டு இயக்க வேண்டி உள்ளதன் காரணமாக, தற்போதைய கால கட்டத்தில் அடையாள அட்டைக்கு காணப்படும் கேள்விக்கு அமைவாக அடையாள அட்டையைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அடையாள அட்டை அச்சிட உபயோகிக்கப்படும் பாதுகாப்பான அட்டையை சந்தையில் கொள்முதல் செய்வதில் பல சிக்கல்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தைப் போன்றே சேவையைப் பெற்றுக் கொள்ள வருகைத் தரும் பொது மக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அதேபோன்றே இவ் அடையாள அட்டைக்கான பாதுகாப்பு யுக்திகளும் நவீன தொழில் நுட்பத்திறகு பொருந்தவில்லை என்பது தெளிவாகிறது. எனவே தனிநபர் தரவு, அவர்களின் குடும்ப விபரங்கள், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவரினதும் புகைப்படங்கள் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தரத்தில் மற்றும் உயிரியற் பண்புத் தரவுகளை பெற்றுக் கொண்டு நவீன கணனி தொழில் நுட்ப செயன்முறையினூடாக இலத்திரனியல் தரவு மையத்தினை அமைத்து அதனூடாக சர்வதேச தரம் வாய்ந்த நவீன பாதுகாப்பு முறையினை உள்ளடக்கிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையானது 2016 ஆம் ஆண்டிற்குள் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. (மேலதிக விபரம்)
திணைக்கள ஆரம்பம் முதல் இது வரை சேவையாற்றிய ஆணையாளர்கள், ஆணையாளர் நாயகங்கள், அவர்கள் சேவையாற்றிய காலப் பகுதி ஆணையாளர்கள்
ஆணையாளர் நாயகங்கள்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் சாதாரண மற்றும் விசேட கட்டளைகளுக்கு அமைவாக செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயற்பாடுகளை மிகவும் சரியாக மேற்கொள்வதற்கு திணைக்களம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திணைக்களம் 4 பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
நிறுவாகக் கிளை திணைக்களத்தின் மனித வள மற்றும் பௌதீக வளங்களை முகாமைத்துவம் செய்தல் பிரதான கடமையாகும்.
கணக்குக் கிளை திணைக்களத்தினது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நிதி மற்றும் சொத்துக்களை நிர்வகித்தல் பிரதான கடமையாகும்.
இயக்கம் மற்றும் தொழில் நுட்ப கிளை 15 வயது ஆரம்பித்த/ துடன் பிரஜைகளையும் பதிவு செய்வதும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு அடையாள அட்டை விநியோகிப்பதும் பிரதான செயற்பாடாகும். அடையாள அட்டை விநியோகிக்கும் செயற்பாட்டினை ஒழுங்கு செய்தல், மேற்பார்வை மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பன இணைச் செயற்பாடுகளாகும். எனவே இக் கிளையானது பின்வரும் உப கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்டிவங்களை கையேற்கும் மற்றும் தபால் பெறும் கிளை
ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களைப் பரீட்சிக்கும் கிளை
குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் ஆவணங்களை வரவழைக்கும் கிளை திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பப்படிவங்களில் குறைபாடுகள் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அக்குறைபாடுகள் தொடர்பில் விண்ணப்பதாரிக்கு தெரியப்படுத்தி அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வது இதன் கடமையாகும்.
அனுமதியளிக்கும் கிளை
தரவு பதிவேற்றக் கிளை
சிங்கள மொழிபெயர்ப்புக் கிளை
தமிழ் மொழிபெயர்ப்புக் கிளை
பதிவு செய்தல் மற்றும் பதிவினை உறுதிப்படுத்தும் கிளை
அடையாள அட்டைகள் அச்சிடும் மற்றும் தரவுகளைப் பரீட்சிக்கும் கிளை
அடையாள அட்டையினைத் தயாரித்தல நிழலுருவெடுக்கும் கிளை
அடையாள அட்டையினை வழங்குதல் மற்றும் தபாலிடுதற் கிளை
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கிளை
|